
சட்டசபை தேர்தல் நடக்கும் 4 மாநிலங்களில் நரேந்திர மோடிக்கு செல்வாக்கு அதிகரிப்பு narendra modi popularity coming election held 4th state
புதுடெல்லி, நவ. 1–
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர் மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் இந்த 4 மாநிலங்களிலும் பிரதமர் வேட்பாளர் தொடர்பான கருத்து கணிப்பை தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
அதில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்– மந்திரியுமான நரேந்திர மோடிக்கு 4 மாநில மக்களும் ஏகோபித்த ஆதரவை தெரிவித்திருப்பது தெரிய வந்துள்ளது. 35 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் நரேந்திர மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளனர்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை 4 மாநில மக்களும் பிரதமர் பதவிக்கு விரும்பவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ராகுல் பிரதமராக 17 சவீதம் பேர்தான் ஆதரவு கொடுத்துள்ளனர்.
கருத்து கணிப்பு நடந்த 4 மாநிலங்களில் டெல்லியில் நரேந்திர மோடிக்கு மிக அதிகமான செல்வாக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த மாநிலத்தில் சுமார் 42 சதவீதம் பேர் மோடியை ஆதரித்துள்ளனர்.
டெல்லியில் ராகுலுக்கு வெறும் 15 சதவீதம் பேரே கை கொடுத்துள்ளனர். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களிலும் ராகுலுக்கு ஓரளவு செல் வாக்கு இருக்கிறது.
பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இருவருக்கும் மக்களிடம் செல்வாக்கு மிக, மிக குறைந்துவிட்டது தெரிய வந்துள்ளது. 4 மாநிலங்களிலும் அவர்கள் இருவருக்கும் சராசரியாக 5 சதவீத மக்களின் ஆதரவே இருக்கிறது.
எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் மன்மோகன்சிங்கை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் காங்கிரஸ் நாடெங்கும் படுதோல்வியை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரசில் வேறு எந்த மூத்த தலைவர்களுக்கும் மக்களிடம் சுத்தமாக செல்வாக்கே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நிலை இதை விட மோசமாக உள்ளது. 4 மாநிலங்களிலும் சராசரியாக அவருக்கு ஒரு சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அவரை விட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு 4 மாநிலங்களிலும் கூடுதலாக ஒரு சதவீத மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. சுஷ்மா சுவராஜ், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் மக்களிடம் குறைந்த சதவீத ஆதரவே உள்ளது.
கருத்து கணிப்பு நடந்த 4 மாநிலங்களிலும் மொத்தம் 72 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 72 தொகுதிகளிலும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதில் பெருவாரியான மக்கள் பா.ஜ.க. பக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் 72 தொகுதிகளில் 57 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கணக்கிட்டதில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வுக்கு 180–க்கும் மேற்பட்ட இடங்கள் உறுதியாக கிடைக்கும் என்கிறார்கள். இந்த கருத்து கணிப்பு முடிவுகள் பா.ஜ.க.வினரை மிகவும் உற்சாகம் அடைய செய்துள்ளது.
...
shared via