Wednesday, September 25, 2013

திருச்சியில் இன்று நரேந்திர மோடி பேசுகிறார் Trichy today BJP conference Narendra modi speech

திருச்சியில் இன்று  நரேந்திர மோடி பேசுகிறார் Trichy today BJP conference Narendra modi speech

பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் இளந்தாமரை மாநாடு திருச்சியில் இன்று மாலை நடைபெற உள்ளது.
2014–ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பாரதீய ஜனதா கட்சி தீவிரமாக களம் இறங்கியுள்ளது. மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் வகையில் வலுவான பிரதமர் வேட்பாளரை நிறுத்த அக்கட்சி முடிவு செய்து பணியை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வரான நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார்.

இதற்கு கட்சிக்குள் எதிர்ப்புகள் இருந்தாலும் அதனை கடந்து காலப்போக்கில் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என உறுதி செய்யப்பட்டார். இதையடுத்து பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வரும் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி வருவதுடன், இந்தியாவில் மின்சாரம், விவசாயம், குடிநீர், தொழில் துறை உள்பட அனைத்து துறைகளிலும் குஜராத் மாநிலத்தை தன்னிறைவு செய்தது போல் இந்தியாவையும் வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வேன் என்ற உறுதி மொழியையும் அளித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் பாரதீய ஜனதா கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கவும், பாராளுமன்ற தேர்தலின்போது மிகப்பெரிய வெற்றியை அடையும் வகையிலும் மிகுந்த எதிர்பார்ப்போடு மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கட்சியின் இளைஞரணி சார்பில் இளந்தாமரை மாநாடு இன்று (வியாழக்கிழமை) திருச்சியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் தொடங்கினர். திருச்சி பொன்மலை ஜி. கார்னரில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு டெல்லி செங்கோட்டை வடிவிலான காவி நிறத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தலைவர்கள் முன்னிலையில் மாநாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்றது.
இளந்தாமரை மாநாட்டில் பங்கேற்க விரும்புவோரின் வசதிக்காக நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர். இதன் மூலம் 2 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். மாநாட்டு மேடை முன்பு தொண்டர்கள், மற்றும் பொது மக்கள் அமருவதற்காக 80 ஆயிரம் இருக்கைககள் போடப்பட்டிருந்தன. மேலும் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கு தனி இட வசதியும் செய்யப்பட்டிருந்தன.
தமிழகமே எதிர்பார்க்கும் வகையில் மாநாட்டை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தொண்டர்கள் 32 ஆயிரம் வாகனங்களில் வந்து குவிந்துள்ளனர். மாநாடு காலை 11 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து மாநாட்டில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை 3 மணி அளவில் பேசுவார்கள்.
அவர்களை தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ் நாத்சிங் மற்றும் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் எழுச்சி உரையாற்றுகிறார்கள்.
நரேந்திர மோடி மாநாட்டில் பேசுவதற்கான உரையை குஜராத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவரும், தமிழகத்தை சேர்ந்தவரும், மோடியின் முக்கிய செயலாளருமான கைலாஷ்நாதன் என்பவர் தயாரித்து உள்ளார். அதில் தமிழகத்தை பற்றிய பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து மாநாட்டு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன. இந்த மாநாட்டில் கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர ராவ், இளைஞரணி தலைவர் அணுராத் தாகூர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு மத்திய அரசு அவருக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு அந்தஸ்சை வழங்கியுள்ளது. இதனால் மாநாட்டு திடல் பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பணியில் 4 டி.ஐ.ஜி.க்கள், 12 எஸ்.பி.க்கள் மற்றும் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாநாட்டு மைதானத்தில் மட்டும் 1,500 போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
மேடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 30 இடங்களில் ரகசிய காமிராக்கள் வைக்கப்பட்டு மாநாட்டு நிகழ்வுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இவை தவிர மாநாட்டுக்கு வருபவர்களை சோதனை செய்ய மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் மற்றும் நவீன ஸ்கேனர் கருவிகள் வைக்கப்பட்டிருந்தன.
மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று பகல் 12 மணிக்கு ராஜ்நாத் சிங் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தனி விமானம் மூலம் திருச்சி வருகின்றனர். கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு தனி விமானம் மூலம் நரேந்திர மோடி பிற்பகலில் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து குண்டு துளைக்காத காரில் நரேந்திரமோடி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் மாநாடு மேடைக்கு மாலை 5.30 மணிக்கு வருகிறார். சிறப்புரையாற்றிய பின்னர் இரவு 7 மணிக்கு மேடையில் இருந்து புறப்பட்டு விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் குஜராத் புறப்படுகிறார்.

No comments:

Post a Comment

Popular Posts