Thursday, September 26, 2013

தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசே காரணம் fishermen issue central govt Narendra Modi

தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசே காரணம்: நரேந்திர மோடி தாக்கு fishermen issue central govt Narendra Modi

 

திருச்சியில் பாரதீய ஜனதா இளந்தாமரை மாநாட்டில் பேசிய நரேந்திரமோடி, தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசின் பலவீனமே காரணம் என்று குற்றம்சாட்டினார்.

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை பாரதீய ஜனதா கட்சி இப்போதே தொடங்கி விட்டது. பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு தலைவராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை தேர்வு செய்த பாரதீய ஜனதா கட்சியின் உயர்மட்ட குழு, கடந்த 13–ந்தேதி அவரை பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது.

தேர்தல் பணிக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே நரேந்திரமோடி இந்தியா முழுவதும் தனது பிரசாரத்தை தொடங்கி விட்டார்.

அந்த வகையில் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இளந்தாமரை மாநாட்டில் நரேந்திரமோடி பங்கேற்று எழுச்சி உரையாற்றினார். மாநாட்டில் சுமார் 1½ லட்சம் பேர் திரண்டு இருந்தனர்.

அவர்கள் மத்தியில் நரேந்திரமோடி பேசுகையில் கூறியதாவது:–

தமிழ் மக்கள் கடும் உழைப்பாளிகள். தமிழ் மக்கள் அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசம் மிக்கவர்கள். தாங்கள் வேலைசெய்யும் இடத்தை கோவில் போல் நினைப்பவர்கள். தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழ் மக்கள் உலகின் முன்னணி நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் உள்ளனர்.

தமிழகத்திற்கும், குஜராத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சென்னையில் உள்ள சவுகார் பேட்டையை தமிழகத்தின் குஜராத் என சொல்வார்கள். அதேபோல் குஜராத் மாநிலத்தில் உள்ள மணி நகரை குஜராத்தின் தமிழ்நாடு என சொல்வோம். நான் வெற்றி பெற்ற சட்டமன்ற தொகுதி மணி நகர் தான். எனது வெற்றிக்கு அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களித்து இருக்கிறார்கள்.

எல்லைப்புற மாநிலங்களாக இருப்பதால் தமிழகத்திற்கும், குஜராத்திற்கும் பல பிரச்சினைகள் உள்ளன. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள் என்றால், குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தினர் அடிக்கடி பிடித்துச்சென்று கொடுமைப்படுத்துகிறார்கள்.

இதற்கு காரணம் மத்தியில் பலவீனமாக காங்கிரஸ் அரசு பதவியில் இருப்பது தான். வாஜ்பாய் பிரதமர் ஆக இருந்த போது இதுபோன்ற கொடுமைகள் நடந்தது இல்லை.

120 கோடி மக்கள் தொகை கொண்ட நமது நாட்டின் ராணுவ வீரர்களை கொன்று பாகிஸ்தான்காரன் தலையை துண்டித்து செல்கிறான். போரில் இறப்பதை விட பயங்கரவாதிகளால் கொல்லப்படும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கிறது. இதைப்பார்த்து வேகப்படவேண்டிய நமது பிரதமர், பாகிஸ்தான் நாட்டின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தான் அவசரம் காட்டுகிறார்.

 நமது நாடு சக்தி இல்லாத நாடா? கையாலாகாத நாடா? ஏன் கட்டிக்கொண்டு, வாயை பொத்திக்கொண்டு இருக்கவேண்டும் என இளைஞர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த கேள்வியை நான் கேட்கவில்லை. பாரதீய ஜனதா கட்சி கேட்கவில்லை. இங்கே திரண்டிருக்கும் இளைஞர்களாகிய நீங்கள் தான் கேட்கிறீர்கள்.

நமது நாட்டின் ராணுவ வீரர்களுக்கும் பாதுகாப்பு இல்லை, எல்லைக்கும் பாதுகாப்பு இல்லை, மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, மாநிலங்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே மத்தியில் நம்மை ஆட்சி செய்ய இப்படி ஒரு அரசு தேவையா? இந்த அரசு தூக்கி எறியப்படவேண்டும். இது தான் நமது முதல் கடமையாகும்.

நாட்டில் ஏற்பட்டு உள்ள பொருளாதார வீழ்ச்சியினால் 20 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இழந்து தவிக்கிறார்கள். இந்த ஆட்சி இன்னும் 5 ஆண்டுகள் நீடித்தால் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை இழந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். எனவே இந்த ஆட்சிக்கு எதிராக திரண்டு உள்ள இளைஞர்கள் சக்தி, மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். திருச்சியில் திரண்டு உள்ள இளைஞர்கள் கூட்டம் எனக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

ஆதார் அடையாள அட்டை திட்டம் கொண்டு வரப்பட்டபோது இந்த திட்டம் வந்தால் குஜராத் போன்ற எல்லைப்புற மாநிலங்களில் வெளிநாட்டினர் ஊடுருவி விடுவார்கள். எனவே தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டி அனைத்து மாநில முதல்வர்களுடன் பேசவேண்டும் என 3 வருடங்களுக்கு முன்பே பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வேண்டுகோள் வைத்தேன். ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இப்போது உச்சநீதிமன்றம் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு குட்டு வைத்து உள்ளது. இந்த திட்டத்தினால் பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது. இதனால் பயன் அடைந்தவர்கள் யார் என்பதற்கு பிரதமர் பதில் அளித்தே ஆகவேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்ததும் மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியை கலைத்து விடவேண்டும் என்றார். காங்கிரஸ் கட்சியினரை பற்றி காந்தியை விட வேறு யாரும் அங்குலம் அங்குலமாக தெரிந்து வைத்திருக்க முடியாது. அவர் சொன்னதை நிறைவேற்றாமல் காங்கிரஸ் கட்சி பிரித்தாளும் சூழ்ச்சியை கடைபிடித்து வருகிறது. மொழி, இனம், ஜாதி அடிப்படையிலும், மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்சினைகளையும் மையமாக வைத்து பிரித்தாளும் அரசியல் செய்கிறது.

அதனால் காங்கிரசை தூக்கிய எறிய மக்கள் முடிவு செய்து விட்டார்கள். காங்கிரஸ் கட்சியோடும், அதனுடன் இணைந்து செயல்படுகிற கட்சிகளோடும், தரகு வேலைகள் ஈடுபடுவோரிடம் இருந்தும் விடுபட மக்கள் விரும்புகிறார்கள். நாடு முன்னேற வேண்டுமானால் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நாடு முதலில் விடுதலை பெறவேண்டும்.

இவ்வாறு நரேந்திரமோடி கூறினார்.

தமிழில் தனது பேச்சை தொடங்கிய நரேந்திரமோடி தொடர்ந்து இந்தியிலும், ஆங்கிலத்திலும் பேசினார். அவரது பேச்சை பாரதீய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்தார். மாலை 6.15 மணிக்கு பேசத் தொடங்கிய மோடி 7.25 மணிக்கு தனது பேச்சை முடித்தார். இரவு 8 மணிக்கு மோடி திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங், தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், அகில இந்திய செயலாளர் முரளிதர்ராவ், அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், லலிதா குமாரமங்கலம், அகில இந்திய செயலாளர்கள் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன், மாநில பொதுச்செயலாளர் சரவணபெருமாள், மாநில செயலாளர் வானதி சீனிவாசன், மாநில இளைஞர் அணி செயலாளர் வினோஜ் பி.செல்வம், மாநில பொருளாளர் சேகர், அகில இந்திய செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் பஸ்கள், வேன்கள், கார்கள் மூலம் திருச்சிக்கு வந்தனர். மன்னார்புரம் ராணுவ மைதானம் உள்பட அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு கட்சி தொண்டர்கள் நடந்தே பொன்மலை ஜி கார்னர் மைதானத்திற்கு சென்றனர்.

இதனால் டி.வி.எஸ். டோல்கேட், பொன்மலை ஜி கார்னர், சென்னை பைபாஸ் சாலை பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களின் கூட்டம் அலைமோதியது. மாநாட்டு மைதானத்திற்கு நடந்தே சென்ற தொண்டர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கவுண்ட்டர்களில் பணம் கட்டி அனுமதி சீட்டு பெற்று மைதானத்திற்குள் சென்றனர்.

தீவிரவாதிகள் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க மாநாட்டுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மாநாட்டுக்கு வந்த தொண்டர்களை மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் மாநாட்டு மைதானத்தில் திரண்டு இருந்தனர்.

No comments:

Post a Comment

Popular Posts